×

தொடக்கப் பள்ளிகளில் 5.50 லட்சம் மாணவர் சேர்க்கைக்கு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 2024-25ம் கல்வி ஆண்டில் 5 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதற்கான பணிகளை துரிதமாக கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தொடக்கப் பள்ளிகளில் 2024-25ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை மார்ச் 1ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. மார்ச் மாத இறுதியில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்காக ஒத்துழைத்த அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் தொடக்க கல்வித்துறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இந்நிலையில் 2024-25ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 5 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவியர் சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குநரகத்தில் இருந்து 5 வயதை நடப்பு ஆண்டில் நிறைவு செய்யும் 3 லட்சத்து 31 ஆயிரத்து 548 குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த விவரம் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த விவரங்களைக் கொண்டு அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கவும், வரும் ஆண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை கணிசமான அளவில் உயர்த்தவும் சார்நிலை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை சேர்க்கை செய்யாத 5 வயதுக்கு மேற்பட்ட அங்கன்வாடி குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் பெற்றோரை அணுகி உடனடியாக அருகாமை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேரக்க அறிவுரை வழங்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பள்ளியின் இணைய தளத்தின் மூலம் பெற்றோருடன் தொடர்பு கொண்டு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் கிடைக்கும் பல்வேறு நலத்திட்டங்களை வசதிகள் குறித்து எடுத்துக் கூற வேண்டும். மேலும் மருத்துவம், மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வழங்கிய குழந்தைகளின் விவரங்களின் அடிப்படையில் அந்த குழந்தைகளின் பெற்றோரிடத்தில் 14417 அழைப்பில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் பேச தொடக்க கல்வித்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே 5 வயதுக்கு மேற்பட்டவர்களை பள்ளிகளில் சேர்க்க அனைத்து கல்வி அதிகாரிகளும் சிறப்பு கவனம் செலுத்தி சேர்க்கைப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். ஏப்ரல் 12ம் தேதிக்கு முன்னதாக 4 லட்சம் மாணவர்கைள சேர்க்க இலக்கு நிர்ணயித்து பணியாற்ற வேண்டும். சேர்க்கும் மாணவர்களின் விவரங்களையும் இஎம்ஐஎஸ் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறியுள்ளார்.

The post தொடக்கப் பள்ளிகளில் 5.50 லட்சம் மாணவர் சேர்க்கைக்கு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : School Education Department ,CHENNAI ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு...